பண்டாரம்


அறிமுகம் :

            பண்டாரம் என்று அழைக்கப்படும்  சமூக மக்கள் தமிழ்நாட்டையும், ஈழத்தையும்  பூர்விகமாக கொண்ட தமிழ்க்குடிகளாகும். பண்டாரம் என்பது பட்டமே தவிர சாதி இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  இவர்களின் குடி பெயர் வைராவி ஆகும். வைராவி என்றால் மனஉறுதி கொண்டவர்கள் என்று பொருள். இவர்கள் பெரும்பாலும் கோவில் பூசை செய்பவர்களாகவும், பூ மாலை கட்டும் பணிகளை செய்பவர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் பெரும்பான்மையான அம்மன் கோவில் பூசாரிகள் இம்மக்களே. மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் இவர்களே பூசாரிகள். மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் இன்றளவும் இவர்களே பூசை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

பண்டாரம் சொல் விளக்கம்:

            பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் ‘ பொன், வெள்ளி, முத்து போன்ற உயர் மதிப்புடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கருவூலம்’ என்பதாகும். கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை அரசு பண்டாரங்களை போலவே கோயில்களிலும் பண்டாரங்கள் இருந்தன. இப்பண்டாரங்களில் உயர் மதிப்புடைய தங்கம், வெள்ளியிலான சிலைகளும் நகைகளும் பாதுகாக்கப்பட்டன. கோயிலில் சமய நூல்களை சேர்த்துப் பேணி வைக்கும் இடம் ‘ சரஸ்வதி பண்டாரம்’ என்றழைக்கப்பட்டதனைச் சுந்தர பாண்டியன் கல்வெட்டு மூலம் அறிகிறோம். இப்பண்டாரங்களின் வாசலில் நின்று காவல்பணி செய்து  வந்தவர்களே இக்காலத்தில் ‘பண்டாரம்’ என்னும் சைவ மதத்தை சார்ந்த சாதியாவர். இவர்களுக்கும் வீரசைவம் மரபை சார்ந்த ஜங்கம், லிங்காயத் போன்றவர்களுக்கும் வரலாறுகள், வழிபாடுகள் அடிப்படையில் எந்த ஒரு தொடர்பும் இல்லை. பண்டாரம் என்ற சாதியினர் குலதெய்வம் வழிபாடு போன்ற பழமை மிக்க வழிபாடுகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் லிங்காயத் மக்கள் குலதெய்வம் வழிபாடுகள், கோவில் வழிபாடுகளை புறக்கணிக்கும் சமயமே தவிர சாதி இல்லை. ஜங்கம் என்பவர்கள் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்கும் பண்டாரம் மக்களுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு வரலாற்று சான்றும் இல்லை. மேலும் இவர்கள் பற்றிய வரலாற்று குறிப்புகளில் ஜங்கம் என்பது நடமாடும் இனத்தவர்கள். ஆனால் பண்டாரம் மக்கள் அசையா மனநிலை கொண்டவர்கள். மன்னர் காலங்களில் கருவூலத்தை காக்கும் கடமை கொண்டவர்கள். அப்படி இருக்கையில் பண்டாரம் மக்களுக்கும், ஜங்கம் மற்றும் லிங்காயத்களுக்கும் எப்படி தொடர்பு இருக்கும். இன்னும் விளக்கமாக சொல்ல போனால் லிங்காயத் என்பதை கர்நாடகவில் 12 ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் என்ற  பிராமணரால் உருவாக்கப்பட்ட சமயபிரிவு. அன்றைய நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்த சமயபிரிவில் இணைந்தனர்.

            பண்டாரம் என்பவர்கள் மன்னர்கள் காலத்தில் தற்போது இருக்கும் காவலாளிகள் போல நின்று கொண்டே காவல் பணி செய்யவில்லை. கோவில் கருவூலத்தின் வாசலில் அமர்ந்து கோயிலுக்குப் பூத்தொடுக்கும் வேலையில் இவர்கள் ஈடுப்படுத்தப்பட்டனர். இவர்கள் பூத்தொடுப்பதற்காகவே தரப்பட்ட கற்பலகைகளை இன்றும் கூட தஞ்சை பெரிய கோவிலில் காணலாம். இவற்றுள் சிலவற்றில் கல்வெட்டுக்களும் உள்ளன. பூச்செடிகளையும், மரங்களையும் உடைய கோவில் நந்தவனங்களைப் பேணும் பொறுப்பும் இவர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்று கோவில் கருவூல காவல் பணிகளில் இவர்கள் இல்லை என்றாலும் பூ தொழில் இவர்களின் குலதொழில் என சொல்லும் அளவிற்கு பிணைக்கப்பட்டு விட்டது எனலாம்.

 

வழிபாட்டு  குறிப்புகள்:

  பண்டாரம் என்னும் மக்கள் வெள்ளாளர்கள் போன்றவர்கள். பிராமணர்கள் அல்லாத கோவில்களில் பூசை செய்வதே இவர்களின் தொழிலாக உள்ளது. இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ள அதிகமான அம்மன் கோவில்களில் இவர்களே பூசாரிகளாக உள்ளனர். வெள்ளாளர்களுக்கும் இவர்களுக்கும் சில பழக்கவழக்கங்களில் ஒற்றுமை காணப்படுகிறது. இவர்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிராமணர்களை வைத்து கொள்வதில்லை. இவர்களுக்கு உள்ளே வாத்தியார் என்று ஒருவரை நியமித்து அவர்கள் தலைமையில் இவர்களின் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவர்கள் சமூகத்தில் இறந்தவர்களை எரிப்பதில்லை. மாறாக குழியில் கிழக்கு நோக்கி அமரவைத்து வில்வம், திருநீறு போன்ற பொருட்களை வைத்து சித்தர்களின் அடக்கவிதிகளை பின்பற்றுகின்றனர். கருமாதி போன்ற நிகழ்ச்சிகளை வீட்டிலே செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இறப்பு சடங்குகள் ஒரு வருடம் எல்லாம் இல்லை. ஐந்து நாட்கள் மட்டுமே. ஐந்தாம் நாள் ஏற்றும் மோட்சதீப சடங்கோடு இவர்களின் திதி முறை முடிகிறது. இரண்டாம் நாள் சமாதியில் நான்கு திசைகளையும் பார்த்தப்படி லிங்கம் செய்துவைத்து நடுவில் தலைமை லிங்கம் பிடித்து வைத்து வழிபாடுகள் மேற்கொள்வார்கள். மூன்றாம் நாள் வீட்டில் அசைவ படையல் வைத்து வழிபாடுகள் மேற்கொள்வார்கள்.

      இவர்களும் மற்றவர்களை போல குலதெய்வ வழிபாடுகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள். குலதெய்வ வழிபாடுகளை முடித்த பிறகே மற்ற  தெய்வங்களை வழிபாடு செய்வார்கள். பழனி முருகன் கோவிலில் நிர்வாகம் முதல் பூசை மேற்கொண்டு வந்த  இம்மக்கள் இன்று  திருமஞ்சன நீர்  எடுத்து கொடுக்கும் குறுகிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விஜயநகர , நாயக்கர் ஆட்சி வருவதற்கு முன்பு வரை தமிழக கோவில்களில் பூசை மேற்கொண்டு வந்த இவர்களை மெல்ல மெல்ல கோவிலில் இருந்து அகற்றி பிராமணர்களை நியமித்தனர் அந்நிய மொழி ஆட்சியாளர்கள். அதற்கு உதாரணம் பழனி முருகன் கோவிலே. இன்று வரை அம்மன் கோவில்கள், கிராம கோவில்களில் இவர்கள் தான் பூசாரிகளாக இருந்து வருகிறார்கள்.


பண்டாரம் சமூக உட்பிரிவுகள் :

            சில ஏமாற்று கூட்டம் பண்டாரம் மக்களிடையே பல உட்பிரிவுகள் உள்ளது என பொய்யுரைத்து வருகிறது. நேரத்திற்கு ஏற்றார்போல 16 என்றும், 19 என்றும், 22 என உட்பிரிவுகள் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அவர்கள் கூறும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. அவர்கள் கூறும் பிரிவுகள் அனைத்தும் புனையப்பட்டதே தவிர உண்மை இல்லை.

உண்மை உட்பிரிவுகள்:

            பண்டாரம் என்று பொதுவாக அழைக்கப்பட்டவர்கள் இன்று நான்கு பிரிவுகளாகவே உள்ளனர்.

  1. ·        ஆண்டி பண்டாரம்
  2. ·        கோவம்ச பண்டாரம்
  3. ·        யோகிஸ்வரர்
  4. ·        கம்பர்

இவர்கள் பயன்படுத்தும் பட்டங்கள் :

  1. ·        பிள்ளை
  2. ·        வாத்தியார்
  3. ·        தேசிகர்
  4. ·        புலவர்
  5. ·        தம்பிரான்
  6. ·        ஓதுவார்
  7. ·        மெய்காப்பான்  
  8. ·        வன்னிமை ( ஈழத்தில் மட்டும் ) 

 

முடிவுரை:

    பண்டாரம் மக்களின் வரலாறுகள் எண்ணற்றவைகள். அவற்றை எல்லாம் ஒரு கட்டுரைகளில் கொண்டு வருவது முடியாத காரியம். எனவே நாங்கள் முடிந்த அளவு சிறு குறிப்புகளாக தந்துள்ளோம். இது போன்ற தமிழ்பண்டாரம் மக்களின் உண்மை வரலாறுகள், வழிபாடுகள் இத்தளத்தில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

 

தகவல் சேகரிக்க எடுக்கப்பட்ட ஆவணங்கள் :

  1. ·        பாண்டியர் வரலாறு
  2. ·        தென்னிந்திய குலங்களும், குடிகளும்
  3. ·        வெள்ளறை  ஊர் கல்வெட்டு தகவல்( தமிழ்நாடு தொல்லியல் துறை)
  4. ·        தமிழ் சமூக வரலாறுகள்
  5. ·        தமிழககோவில்களும் கல்வெட்டுகளும்

 

 

.....நன்றி..... 

Comments

Popular posts from this blog

கோவம்ச பண்டாரம்